கல்வி

நம் நிறுவனங்கள்

பிரகாசபுரம் பங்கில், பங்குத் தந்தையின் நிர்வாகத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும், மூன்று துவக்கப்பள்ளிகளும் செயல்பட்டு மாணவ, மாணவியரின் வாழ்வை மேம்படுத்துகின்றன.

நடுநிலைப்பள்ளி

புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி

🏫

1929ஆம் ஆண்டு, பழைய தேவாலயத்தின் வடபாகத்தில், 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் திரு. மரியசிங்கத் தேவர் ஆவார். அருட்திரு. சந்தன மரியான் சுவாமி நிர்வாகியாக இருந்த காலத்தில் பள்ளி அதிக முன்னேற்றம் அடைந்தது; அப்போதுதான் இப்பள்ளி 1 முதல் 8 வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளியாகத் திகழ்ந்தது. அப்போது திரு. மரியபாக்கியத் தேவர் தலைமை ஆசிரியராக இருந்தார். பின்னர் சங். மெல் சுவாமி காலத்தில், வியாகுல அன்னை சகோதரிகளால் நடத்தப்பட்டு வந்த கருணை இல்லத்திலிருந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த முதல் சகோதரி சங். கஸ்மீர் குமரி அவர்கள் ஆவார். 1991ஆம் ஆண்டு பங்குத் தந்தை இல்ல வளாகத்திற்குள் புதிய பள்ளிக் கட்டடம் அமைக்க ஆயர் S.T. அமலநாதர் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

சாதனைகள்

1944, 1952 ஆகிய ஆண்டுகளில் நாசரேத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முதல் கேடயங்களைப் பெற்றுள்ளது. ஆசிரியர் A. தேவ ஆசீர்வாதம் அவர்களின் பெரும் முயற்சியால், நாசரேத்தில் நடைபெற்ற அறிவியல் பொருட்காட்சியில் முதல் பரிசையும் அதற்கான கேடயத்தையும் பெற்றுள்ளது.

நிறுவப்பட்டது

1929

வகுப்புகள்

1–8

இடம்

பிரகாசபுரம்

துவக்கப்பள்ளி

புனித வளன் துவக்கப்பள்ளி

🏫

நாசரேத்திற்கு அருகில் உள்ள கந்தசாமிபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள இப்பள்ளி 18-10-1962 அன்று தோன்றியது. வியாகுல மாதா சபை சகோதரிகளின் கண்காணிப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியையாக சகோதரி கத்தரீன் மேரி அவர்கள் பணியாற்றியுள்ளார்கள். “நும் ஒளி மிளிர்க” என்னும் வாக்கின்படி, மாணவ மாணவியரின் வாழ்வு ஒளிரும்படியாக அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, மனிதாபிமானம் ஆகிய நற்பண்புகளை இறைபக்தி, நிறைக் கல்வி மூலம் உருவாக்கும் உயரிய நோக்குடன் பணியாற்றி வருகின்றது. வாரம்தோறும் திங்கட்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது; அன்று மாணவ, மாணவியர் நீல வண்ணச் சீருடை அணிவர். மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

சாதனைகள்

1972ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதன்மையான கேடயத்தைப் பெற்றுள்ளது.

நிறுவப்பட்டது

1962

இடம்

கந்தசாமிபுரம்

ஆரம்பப்பள்ளி

R.C. ஆரம்பப்பள்ளி, தோப்பூர்

🏫

பிரகாசபுரம் பங்கின் துணைப் பங்குகளில் ஒன்றான தோப்பூரில், லூர்து அன்னை சிற்றாலயத்திற்கு அருகில் இப்பள்ளி திறம்பட இயங்கி வருகிறது. ஏறக்குறைய 1905ஆம் ஆண்டு இப்பள்ளி உருவாயிற்று என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர், மாணவியர் அனைவரும் கல்வி மேம்பாட்டிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர். பழைய பள்ளி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அருட்திரு. ஜோசப் அமல்ராஜ் அவர்கள் காலத்தில் 1990ஆம் ஆண்டு புதிய பள்ளிக் கட்டடம் எழுப்பப்பட்டது.

நிறுவப்பட்டது

ஏறக்குறைய 1905

இடம்

தோப்பூர்

துவக்கப்பள்ளி

R.C. துவக்கப்பள்ளி, உடையார்குளம்

🏫

உடையார்குளத்தில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம் கட்டப்படுவதற்கு ஏறக்குறைய 67 ஆண்டுகளுக்கு முன்பே இப்பள்ளி இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள மாதா கோவிலின் தென்புறம் இப்பள்ளி கட்டப்பட்டது. ஏறக்குறைய 1939ஆம் ஆண்டு முதல் அரசின் அங்கீகாரம் பெற்றது. முதலில் கூரையால் வேயப்பட்டிருந்த இப்பள்ளி, பின்பு சுவாமி தங்குவதற்கென்று கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்பட்டது. மாணவர் சங்கம், பெற்றோர் சங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

நிறுவப்பட்டது

1939-க்கு முன்

இடம்

உடையார்குளம்